top of page

 

 இப்படி செய்யலாமா?

 

 

கேள்வி: 

இயேசுவின் இரத்தம் என்று சொல்லி ஜெபிக்கலாமா?

பதில்: 

ஜெபம் என்பது அது தேவனோடு பேசுவதாகும். ஆனால் இயேசுவின் இரத்தம் ஜெயம் என்று ஏன் ஜெபத்தில் கூறுகிறீர்கள்? என்று விளங்கவில்லை!.

நிறையபேர் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கூடம் அனுப்பும்போது இயேசுவின் இரத்தம் ஜெயம் என்று சொல்லி சிலுவை அடையாளம் நெற்றியில் போட்டு அனுப்புகிறார்கள்?

நீங்கள் வேதபுத்தகம் படித்தவர்கள்தானே! கொஞ்சம் யோசியுங்கள். ஏன் இயேசுவின் இரத்தம் ஜெயம் என்ற வார்த்தையை அடிக்கடி கூறுகிறீர்கள்?.

இயேசுவின் இரத்தம் ஜெயம் என்பது ஒரு மந்திர வார்த்தை அல்ல இயேசுவின் இரத்தம் ஜெயம் என்று கூறினால் பிசாசு ஓடிப்போவான் என்று அந்த காலத்தில் நானே பாடியிருக்கிறேன். 

அந்த பாட்டில் அந்த வார்த்தை பிழையாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. இயேசுவின் இரத்தம் என்று சொன்னால் பிசாசு ஓடிப்போவானா? நிச்சயமாக ஓடிபோகமாட்டான்.

நிறைய பேர்களுடைய அபிப்ராயம் இயேசுவின் இரத்தம் ஜெயம் என்ற வார்த்தைக்கு நிறைய வல்லமை இருக்கிறது என்பதாகும். வேத புத்தகம் அறிந்த விசுவாசிகளும் இயேசுவின் இரத்தம் ஜெயம் என்ற வார்த்தையை மருந்து சாப்பிடும்போது கூறுகிறார்கள்.

அடிப்பட்டால் உடனே அடிப்பட்ட இடத்தில்இயேசுவின் இரத்தம் ஜெயம் என்று சொல்லி சிலுவையையும் அங்கு வரைந்து விடுகிறார்கள். 

இராத்திரி பிள்ளைகள் பயந்து அழுதால் இயேசுவின் இரத்தம் ஜெயம் என்று கூறிக்கொண்டே கண்ணை மூடி தூங்கு என்று சொல்லிக் கொடுக்கிறார்கள். இந்த பிள்ளைகள் வளரும்போது அந்த தவறுகள் அப்படியே மனதில் பதிந்துவிடுகிறது.

எப்போது பார்த்தாலும் இயேசுவின் இரத்தம் ஜெயம் என்று எல்லா காரியங்களுக்கும் அந்த வார்த்தையை பலர் பயன்படுத்துகிறார்கள்.

நான் இயேசுவின் இரத்தத்துக்கு எதிரானவன் அல்ல. அந்த இயேசுவின் இரத்தம் எனக்காக சிந்தப்பட்டது என்று நான் விசுவாசித்தால் அந்த இரத்தம் என்னை கழுவியது அதனால்தான் என் பாவம் நீங்கி சுத்திகரிக்கப்பட்டவனாக இன்றும் ஊழியம் செய்து கொண்டிருக்கிறேன்.

இயேசுவின் இரத்தம்:

எபிரோயர் 9:20ன்படி தேவன் உங்களுக்கு கட்டளையிட்ட உடன்படிக்கையின் இரத்தம் என்று இயேசுவின் இரத்தத்தைப்பற்றி கூறப்பட்டுள்ளது.

என்ன உடன்படிக்கை?:

உடன் படிக்கை என்றால் ஒப்பந்தம் என்று அர்த்தம்.

லேவி 17:11. மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது. நான் அதை உங்களுக்கு பலபீடத்தின் மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காக பாவ நிவர்த்தி செய்யும்படிக்கு கட்டளையிட்டேன். இந்த வசனத்தில்கட்டளையிட்டேன் என்று கூறுகிறவர் யார்? பிதாவாகிய தேவன் அப்படி கூறியிருக்கிறார்.

பழைய ஏற்பாட்டின் காலத்தில் மனிதனின் பாவம் கழுவப்பட மிருகங்களின் இரத்தம் பலியிடப்பட்டு அந்த இரத்தம் சிந்தினால் பாவம் நீங்கும் என்று கருதப்பட்டது. ஆனால் தேவன் இப்படிப்பட்ட மிருக பலியினால் பாவம் நிவிர்த்தி செய்யப்படுவதை விரும்பவில்லை. 

உலக மக்கள் அனைவரின் பாவத்தையும் நீக்க ஒரு பரிசுத்த இரத்தம் சிந்தப்பட்டால்போதும். அதனிமித்தம் மனிதர்களின் பாவம் கழுவப்படும் என்ற திட்டத்தை பிதா ஏற்பாடு செய்தார்.

லேவி 17:11லேயே ஆத்துமாவிற்காகப் பாவ நிவர்த்தி செய்கிறது இரத்தமே என்று பிதா கூறினார். இதுதான் மனிதன் தேவனுடைய பிள்ளையாக மாற மனிதனின் பாவம் மன்னிக்கப்பட்டு தேவனோடு இணையும் உடன்படிக்கை அல்லது தேவ திட்டம் ஆகும்.

இதன் அடிப்படையில்தான் மேசியாவாக இயேசுகிறிஸ்து இரத்தம் சிந்தி மரிக்கவேண்டி உலகத்துக்கு அனுப்பப்பட்டார். 

பிதாவின் திட்டத்தின்படியே இயேசுகிறிஸ்து சிலுவையில் இரத்தம் சிந்தினார், மரித்தார், உயிர்த்தார் இப்போதும் உயிரோடு இருக்கிறார்.

இயேசுகிறிஸ்து உலகத்தில் பிறந்ததும், இரத்தம் சிந்தியதும் கிறிஸ்தவர்களுக்காக அல்ல - உலகத்தில் உள்ள அனைவருக்காக உலக மக்களை பாவத்திலிருந்து மீட்பதற்காகவும் தன் இரத்தத்தை சிந்தினார். 

இயேசு 2000 வருடங்களுக்கு முன் இரத்தம் சிந்தினார். ஆனால் 2000 வருடத்துக்குமுன் சிந்திய அந்த இரத்தம் இப்போது, இந்த காலத்தில் எப்படி மனிதனின் பாவத்தை கழுவும்?

விசுவாசத்தால் கழுவும் என்பதுதான் பதில்:

அன்று சிந்திய இரத்தம் எனக்காகவும் சிந்தப்பட்டது என்று நம்பி, விசுவாசித்து நாம் நம் பாவங்களை அறிக்கையிட்டால் அந்த நிமிடமே நம் பாவம் முழுவதும் கழுவப்படும்.

இயேசுவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும். 1யோ 1:7. நாம் நம் பாவங்களை அறிக்கையிட்டால்மட்டுமே (1யோ 1:9) அந்த அற்புதம் சம்பவிக்கும்.

இதுதான் இயேசுவின் இரத்தத்தின் மகிமையாகும். அல்லது ஜெயமாகும் என்றும் கூறலாம். நம் பாவங்களை கழுவுவதற்காகத்தான் இயேசுவின் இரத்தம் பயன்படவேண்டும் என்பது தேவ திட்டம் - 

பிதாகூறியபடி மனிதனோடு செய்த உடன்படிக்கையின்படி பிதாவின் திட்டத்தையும் இயேசுகிறிஸ்துவை சிலுவை தண்டனைமூலம் இரத்தம் சிந்தவும் செய்த தேவஉடன்படிக்கை நடந்து முடிந்துவிட்டது.

அன்று இஸ்ரவேல் மக்கள் மரத்தின்மேல் தூக்கி நிறுத்தப்பட்ட வெங்கல சர்ப்பத்தை பார்த்தால் பாம்பு விஷகடி மரணத்திலிருந்து தப்பலாம் என்று கட்டளையிட்டபோது அதற்கு கீழ்படிந்து கேள்வி ஏதும் கேட்காமல் வெங்கல சர்ப்பத்தை விசுவாசத்தோடும் கீழ்படிந்தலோடும் பார்த்தவர்கள் அத்தனைபேரும் பிழைத்தார்கள். 

அவர்கள் சாகவில்லை. அதைப்போலவே சிலுவையில் தூக்கப்பட்டு தொங்கியஇயேசுகிறிஸ்துவையும், அவர் சிந்திய இரத்தத்தையும் நம்பி நான் என் பாவத்தை விட்டுவிடுகிறேன் என் பாவத்தை கழுவும் என்று ஜெபிப்பவர்களுக்கு மட்டும் பாவமன்னிப்பும், பாவத்திலிருந்து விடுதலையும் அந்தநிமிடமே இயேசுவின் இரத்தம் மூலம் நமக்கு கிடைக்கும்.

ஆக, இயேசுவின் இரத்தம் மனித பாவத்தை கழுவுவதற்காகமட்டுமே சிந்தப்பட்டது. மற்றப்படிவியாதியை சுகமாக்க அல்ல, பிசாசை துரத்த இயேசுவின் இரத்தம் ஜெயம் என்ற வார்த்தையை உபயோகிக்கமுடியாது.

இயேசுவின் இரத்தக்கோட்டை என்பது பாடலுக்கு கேட்க நன்றாக இருக்கும். ஆனால் அது அர்த்தம் இல்லாதது. அப்படி ஒரு இரத்த கோட்டை கிடையாது. சில ஊழியர் கூறுகிறபடிஇயேசுவின் இரத்தம் நம்மை மூடாது.

இயேசுவின் இரத்தத்தை தடவுகிறேன் என்று கூறி சிலர் ஜெபிப்பதை கேட்டிருக்கிறோம். அது தவறு. டெல்லியில் பாஸ்டர்.பி.ஜி.வர்கிஸ் என்பவர் நல்ல ஊழியர். 

அவரின் ஊழிய ஆரம்பம் சரியாக இருந்தது. அதன்பிறகு அவர் வசனத்தை விட்டு கொஞ்சம்கொஞ்சமாக விலக ஆரம்பிதார். புதுபுது உபதேசங்கள் அவர் வாயிலிருந்து புறப்பட்டன.

அவர் எழுதுகிறார்: தினசரி நான் இயேசுவின் இரத்தத்தை என் மகன் மீது பூசி ஜெபிப்பேன். மகன் உபயோகிக்கும் சைக்கிள்மீதும், எங்கள் வாகத்தின்மீதும் பூசி ஜெபிப்பேன். அதைவிட தமாஷ் என்னவென்றால் தினசரி என் வீட்டு நாயின் மீதும் இயேசுவின் இரத்தத்தை பூசுவேன் என்றார். நல்ல ஊழியர் வசனத்தைவிட்டு விலகிவிலகி நாய், மற்றும் வீட்டு மிருகங்கள் வரை போய்விட்டார்.

பரிதாபம்.

இயேசுவின் இரத்தம் பெயின்ட் அல்ல. வீட்டுக்கு சுவரில் பூசும் சுண்ணாம்பும் அல்ல. இயேசுவின் இரத்தம் தடவுகிறோம், பூசுகிறோம் என்பவர்கள் பெயின்டர்களாக இருந்தால் மட்டும் அப்படி செய்வார்கள்.

இப்படிப்பட்ட காரியத்தை நல்ல ஊழியன், வரம்பெற்ற ஊழியன் என்றெல்லாம் வர்ணிக்கப்படுவர் யார் கூறினாலும் நம்பாதீர்கள். ஆகவே இதை வாசிக்கிறவர்கள் இனி இயேசுவின் இரத்தம் ஜெயம் என்ற வார்த்தையை கூறினால் பயம்நீங்கிபோகும், வியாதி சுகமாகும், வலி நீங்கிபோகும் என்றெல்லாம் பிள்ளைகளுக்குகூட சொல்லி கொடுத்துவிடாதீர்கள்.

இயேசுவின் இரத்தம் எப்படி பாவத்தை கழுவும் என்பதை வசனத்தின்மூலம் சொல்லிக்கொடுங்கள்.பாவம் கழுவப்பட்டால் இயேசுவின் பிள்ளைகள் ஆவோம், இயேசுவின் பிள்ளையாக மாறினால் இயேசுவின் வசனத்துக்கு கீழ்படியும் ஆசை நமக்கு உண்டாகும்.

இயேசுவின் வசனத்துக்கு கீழ்ப்படிந்தால் வியாதி தானே சுகமாகும். சங் 120:7 யாக் 5:16. இயேசுவின் வசனத்துக்கு கீழ்படிந்தால்மட்டுமே நாம் செய்யும் ஜெபமும் கேட்கப்படும். யோ 15:7, நீதி 28:9. இப்படித்தான் நம் வேதம் போதிக்கிறது. இப்படித்தான் நம் பிள்ளைகளுக்கோ மற்றவர்களுக்கோ நாம் கற்றுத்தரவேண்டும்.

மேலே குறிப்பிட்டப்படி கூறாமல் எதற்கெடுத்தாலும் இயேசுவின் இரத்தம் ஜெயம்! இயேசுவின் இரத்தம் ஜெயம்! என்று கூறினால் அது மந்திர வாக்குபோல அர்த்தமாகும். மந்திரவாதி கூறும்போது கவனித்திருப்பீர்கள். "சூ மந்திரகாளி" இப்படி கூறி மந்திரம் செய்து வித்தை காட்டுவான். கர்த்தர் சிந்தின அந்த தியாக இரத்தத்தை மந்திரவாதி உபயோகிக்கும் வார்த்தைப்போல கேலி வார்த்தையாக்கிவிடாதீர்கள். வலி வந்தால், வியாதி வந்தால், இராத்திரி பிள்ளைகள் பயந்தால் இயேசுகிறிஸ்துவுடன் ஜெபிக்க அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். இயேசுவின் வசனத்துக்கு கீழ்படிந்தால் கர்த்தர் ஜெபம் கேட்பார். பரீட்சையில் பாஸ்ஸாக ஞானம் தந்து உதவுவார். இயேசுவின் வசனத்துக்கு கீழ்ப்படிந்தால் நம் ஜெபத்துக்கு பதில் நிச்சயம் கிடைக்கும். இதை புரிந்துகொள்ளாமல் சமாதானம் கிடைக்கும், நிம்மதி கிடைக்கும். கண்டதெற்கெல்லாம்இயேசுவின் இரத்தம் ஜெயம் என்று கூறி நீங்கள் யாரும் மந்திரவாதியாகாதிருங்கள்.

சிலுவை போடுவது:

சிலுவை ஆலயத்தின்மேல் வைப்பது. ஆலய டேபிளில் வைப்பது அது ஒரு கிறிஸ்தவ ஆலயம் என்று புறஜாதியார் எளிதில் அறிந்துக்கொள்ள ஏதுவுண்டாகும். ஆனால் அந்த சிலுவையை பார்த்து வணங்கினால் அதுவே விக்கிரக வணக்கமாகிவிடும்.

ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் வரை வேதம் முழுவதுதிலும் கர்த்தர் வெறுக்கிற முக்கிய விஷயம் விக்கிரக ஆராதனை ஆகும். சரியான விசுவாசிகள் ஆராதிக்கும் சில சபைகளில் எந்த சிலுவையையும், சிலுவை அடையாளத்தையும் பார்க்கமுடியாது.

என் வீட்டில் இயேசுவின் படம் பலவருடமாக என் பெற்றோரின்காலம் முதல் மாட்டப்பட்டுள்ளது. அப்படியே ஒரு சிலுவை படமும் உண்டு. ஆனால் நாங்கள் யாரும் அதை பார்த்து ஜெபிப்பதோ, அதை பார்த்து கைகூப்புவதோ இல்லை. 

ஆகவே சிலுவை ஒரு அடையாள சின்னமாக அல்லது நினைவு சின்னமாக தேவையானால்மட்டும் உபயோகிக்கலாம்.

இயேசுகிறிஸ்து உலகமனைத்து மக்களுக்காகவும் நமக்கு பதிலாகவும் சிலுவை தண்டனையை ஏற்றுக்கொண்டு நாம் தண்டிக்கப்படாமல் நம்மை அவர் இரட்சித்தார் என்று அந்த சிலுவைப்பற்றி மற்றவர்களுக்கு விளக்கம் கூறி அறிவிக்க அதை காட்டி பயன்படுத்தலாம். 

ஆனால் சிலுவையை வணங்கிவிடக்கூடாது அது விக்கிரக ஆராதனை ஆகிவிடும்.

பிஷப்மார்களுக்கு எப்படி விசேஷ அங்கி யூனிபார்ம் ஆக பயன்படுகிறதோ அப்படியே கழுத்தில் சிலுவை தொங்கவிடுவதும் அவரவர் சபையின் ஒழுங்கு ஆகும். 

ஜெபிக்கும்போது சிலுவையின் அடையாளத்தை நெற்றியில் வரைய சொல்லி நிறையபேர் எதிர்ப்பார்க்கிறார்கள்.

நானும் வருகிறவர்களின் விருப்பப்படி சிலுவை அடையாளத்தை ஒரு சிலருக்கு வரைந்து ஜெபித்ததுண்டு.

ஜெபிக்கும்போது இந்த சிலுவை அடையாளம் உங்கள் நெற்றியில் வரைவதால் அல்ல. சிலுவையின் அர்த்தத்தை விளங்கி அந்த சிலுவையில் அறையப்பட்டவரை உள்ளத்தில் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறி அவர்களுக்காக ஜெபிப்பேன். 

சிலுவை வரைந்தால் நெற்றியில் காணப்படாது. ஆனால் சிலுவை நாயகனாகிய கிறிஸ்துஉள்ளத்தில் வந்துவிட்டால் அப்படிப்பட்டவர்களுக்கு சிலுவையை வெளியிலோ, கழுத்திலோஅணிந்துக்கொள்வதால் ஒரு பிரயோஜனமும் இல்லை.

சிலர் சிலுவையை மணியில்கோர்த்து காரில்முன்னே மாட்டிவைப்பார்கள். அந்த சிலுவை கார் ஓட்டுபவரை காப்பாற்றும் என்ற தவறான அபிப்ராயத்தை நல்ல ஆழமுள்ள ஆவிக்குரிய விசுவாசிகள் கூட நம்புகிறார்கள்!. இது எத்தனை முட்டாள்தனம்!.

கார், லாரி, விபத்துக்கள் நடந்தால் கவனித்து பாருங்கள். சிலுவை மாலை அல்லது சிலுவையின் அடையாளத்தை காரின் பின்னால் அல்லது முன்புறம் வரைந்த வண்டியும் கவிழ்ந்து கிடக்கும். சிலுவை இடாமல் பிள்ளையார் சிலை வைக்கப்பட்ட வண்டியும் கவிழ்ந்து கிடக்கும். 

வண்டி ஓட்டுபவர் சரியாக ஓட்டாமல்போனால் சிலுவை என்ன செய்யும். சிலுவை நாயகனாகிய கிறிஸ்து உங்கள் உள்ளத்தில்இருந்தாலும் ஒருவேளை விபத்து நேரிடலாம். ஆனால் அந்த விபத்தில் கர்த்தர் நம்மை பாதுகாப்பதையும் சிறு காயங்களுடன் நம் ஆயூளை நீட்டி உதவுவதையும் உணரலாம்.

இரண்டு பிஷப்மார் தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் உள்ளவர்கள்போலீஸ் பிடியில் சிக்கினார்கள். பெண் ஒருவளோடு விபச்சாரம் செய்யும்போது அவர்கள் அகப்பட்டார்கள். இது கற்பனை கதையல்ல,பத்திரிக்கை செய்தி:

போலீஸ் ஸ்டேஷனில் அதிகாலை டூட்டிக்கு வந்த போலீஸ் அதிகாரி அந்த பிஷப்புடன் பேசும்போது கழுத்தில் சிலுவையை அணிந்துக்கொண்டு இப்படிப்பட்ட பாவம் செய்துவிட்டீர்களே!. 

எப்படி உங்களுக்கு பாவம் செய்ய தைரியம் வந்தது? என்று கேட்டார். அதற்கு அந்தபிஷப் நான் சிலுவையை இரவில் கழற்றிவைத்துவிடுவேன் என்றார். 

அதன் அர்த்தம் பாவம் செய்யும்போது சிலுவையை கழற்றிவிட்டு பாவம் செய்து முடித்தவுடன் அதை மறுபடியும் மாட்டிக்கொள்வேன் என்பதாகும். 

கழுத்தில் தொங்கவிடும், சாதராண மர சிலுவைக்கு கொடுக்கும் மரியாதை அதற்கு காண்பிக்கும் பயமும், இயேசு காண்கிறவர் என்ற உணர்வும் இவர்களுக்கு இருந்திருந்தால் இப்படி பாவம் செய்வார்களா?.

சிலுவை பிசாசைவிரட்டும் என்று பலர் நம்புகிறார்கள். அதனால் பிசாசு பிடித்த நபரை ஜெபத்துக்கு அழைத்து வந்தால் தலையில் சிலுவையை வைத்து ஜெபிப்பார்கள். அல்லது வேத புத்தகத்தை தலையில் வைத்து ஜெபிப்பார்கள். இவைகள் யாவும் மூட நம்பிக்கைகளாகும். இந்த சிலுவைக்கும்,வேதபுத்தகத்திற்கும் பிசாசு பயப்படாது. சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவுக்கு மட்டுமே பிசாசு பயப்படும்.

வேதபுத்தகத்தில் எழுதப்பட்ட வசனத்துக்கு பிசாசு பயப்படும், ஆனால் வேதபுத்தகத்துக்கு பயப்படாது. தயவுசெய்து வசனத்தை சரியாக வாசியுங்கள்: 

வசனத்துக்கு கீழ்படியுங்கள். இயேசுகிறிஸ்துவையும், அவர் அறையப்பட்ட சிலுவையையும், சிந்திய இரத்தத்தின் நோக்கத்தையும் அறிந்து உணர்ந்து ஜீவித்தால்அதுதான் அர்த்தம் உள்ள கிறிஸ்த ஜீவியம்.

இங்கிலாந்து தேசத்தில் என்னை இரண்டு கிறிஸ்தவ ஆலயங்களுக்கு அழைத்து சென்றார்கள். 

அந்த ஆலயம் பூட்டி பராமரிக்கப்படாமல் பாழடைந்து இருந்தது. காரணம் அந்த ஆலயத்தில் பிசாசுகுடியேறியிருக்கிறதாகவும், அதனால் யாரும் அந்த பக்கமாகக்கூட போவதில்லை என்றும் கூறக் கேட்டேன்.

இப்படிப்பட்ட மூட நம்பிக்கை வெள்ளைக்காரர்களிடம் நிறைய உண்டு.

இதில் நான் குறிப்பிடுவது என்னவென்றால் அந்த ஆலயத்தில் நடுவே. இயேசு சிலுவையில் அறையப்பட்ட காட்சியுள்ள பெரிய மர சிலுவை வைக்கப்பட்டுள்ளது. 

மேசையில் 3 சிலுவைகள் உண்டு. ஞானஸ்நான தொட்டியில் சிலுவை ஆலய வாசல்படியில் சிலுவை, ஆலயத்தின் கோபுரத்தில் சிலுவை.

ஆனால் ஆலயத்தின் உள்ளேயோ பிசாசு. இது எப்படியிருக்கிறது!. ஆகவே, மர சிலுவை அல்லது தங்கசிலுவையை கழுத்தில் தொங்கவிடுவதில், வீட்டில் அல்லது வாகனத்தில் தொங்கவிடுவதில்,

நெற்றியில்இடும் சிலுவை அடையாளத்தில் நம்பிக்கை வைக்கவேண்டாம், இவைகள் எதுவும் உங்களையோ, உங்கள் பிள்ளையையோ, உங்கள் வாகனத்தையோ காப்பாற்றாது. இயேசுகிறிஸ்து உங்கள் உள்ளத்தில் வரவேண்டும்.

சிலுவையின் அர்த்தம் உங்களுக்கு புரியவேண்டும். கிறிஸ்துவின் வேத வசனம் உங்கள் மனதில் எப்போதும் பதியவைத்து அதை தியானித்துக்கொண்டேயிருந்தால் நீங்கள்தான் உண்மை கிறிஸ்தவர்.

உங்களுக்குள் இருக்கிறவர் பரிசுத்த தெய்வமான இயேசுகிறிஸ்து என்ற எண்ணம் உங்களை எல்லா பாவத்துக்கும் விலக்கும் எல்லா ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்றும். சிலுவை வெளியே வைப்பதில் பிரயோஜனமல்ல. அந்த சிலுவையில் அறையப்பட்டவரை உங்கள் மனதின் உள்ளே அழையுங்கள்.

 

இயேசுவின் நாமம்  

 

யோவான் 14:13,14  நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன். என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்.

 

மாற்கு 16:17,18  விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;
சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக்குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.


இதோ இதய வாசலை தட்டுகிறேன். கதவை திறந்தால் உள்ளே வருவேன் என்று இயேசு கூறுகிறார்.வெளி 3:20.

jeh mission church

+ 41 78 755 26 67

church@bluewin.ch

A/C: 2044.0696.2001

IBAN: CH14 0077 8204 4069 6200 1

REGINA ERIC

PRESIDENT

JEH MISSION

HEITERWEID 7 6015 LUCERNE

SWITZERLAND

@2017 by JEHM Media

  • YouTube Social  Icon
  • Facebook Social Icon

SUNDAY  TAMIL SERVICE @ 14:00 HRS

MOOSHÜSLISTRASSE 24 6032 EMMEN (LU)

SWITZERLAND

JEHM LUKB AC.png

Success! Message received.

bottom of page