நம் வாழ்க்கைக்கு ஞானம் அறிவு என்கிற பொக்கிஷங்கள் நமக்கு மிகவும் அவசியமான ஒன்று. எவ்விதமான ஞானம் நமக்குத் தேவை? அது தேவனுடைய ஞானம் அறிவு என்பவை நமக்குத் தேவை. இவ்விதமான ஞானத்தைக் கொண்டிராதவன் மூடனாகக் காணப்படுகின்றான். ஞானம் அறிவு என்பது அற்பமான ஒன்றல்ல. வேதம் அதனை பொக்கிஷம் என்று கூறுகிறது. இந்த உலக வாழ்க்கையில் இதைப் போன்ற விலையேறப்பெற்ற ஒன்று வேறெதுவுமே கிடையாது. நாம் அநேக சமயங்களில் தேவனுடைய ஞானத்தை அசட்டைப் பண்ணுகிறோம். மேலும் இந்த உலகத்தின் ஞானத்தை விரும்புகிறோம். அதைக்கொண்டு நம் வாழ்க்கையைக் கட்ட வாஞ்சிக்கிறோம். அதின் முடிவு என்பது தோல்வியே.
வானத்தையும் பூமியையும் படைத்த தேவனுடைய ஞானம் என்பது எந்தவொரு மனிதனாலும் ஆராய்ந்து முடியப்படாத ஒன்று. இந்த உலகத்தின் சிருஷ்டிப்புகளை நாம் பார்க்கும் பொழுது தேவனுடைய ஞானத்தை பார்க்கமுடியும். ஆகவேதான் வேதம்: “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது” (சங்கீதம் 19:1) என்று சொல்லுகிறது. தேவனுடைய ஞானமானது நம் உலக வாழ்க்கைக்கும், தேவனுடைய ராஜ்ஜியத்தில் நுழைவதற்கும் மிக அவசியமான ஒன்றாகும். ஆகவேதான் பவுல், “நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்பட” (கொலோ 1:9) வேண்டும் என்று பவுல் எச்சரிக்கிறார். ஆவிக்குரிய காரியங்களை அசட்டைப் பண்ணாதே. அவைகள் விலையேறப்பெற்ற பொக்கிஷங்கள். கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் என்பதை மறவாதே.