வேத வாக்கியம் நிறைவேறத் தக்கதாக “தாகமாயிருக்கிறேன்” என்றார் என்று யோவான் கூறுகிறார். பழைய ஏற்பாட்டிலே “என் நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது” (சங்கீதம் 22:15), “என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள்” (சங்கீதம் 69:21) என்று சிலுவையைக் குறித்து ஏற்கனவே தீர்க்கதரிசனங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.
இந்த தாகம் சாதாரணமான தாகமல்ல என்றும், அக்கினியின் மத்தியில் இருக்கிற ஒரு மனிதனுக்கு ஏற்படும் மரண தாகம் போன்றது என்றும் வேத வல்லுநர்கள் கூறுகிறார்கள். இது இயேசு அனுபவித்த நரக வேதனையைக் குறிக்கிறது. மனிதனுக்காக அவனுடைய நரக வேதனையை இவர் அனுபவித்தார். எந்த ஒரு மனிதனும் ஒருபோதும் நரக வேதனையை அனுபவிக்கக் கூடாது என்பதற்காகத்தான் இவர் அந்த வேதனையை ஏற்றுக்கொண்டார். நாம் எல்லோரும் பரலோக இன்பத்தை அனுபவிப்பது மட்டுமே கடவுளுடைய விருப்பம் என்பதை நாம் கவனிக்க வேண்டும். மேலும் தாகமாக இருந்த அவர் புளித்த காடியைக் குடிக்க வாங்கிக்கொண்டது நம்மீது தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வந்துகொண்டிருந்த சாபங்களை அவர் அகற்றிவிட்டார் என்பதைக் காட்டுகிறது.
முன்னோர் செய்த பாவத்தின் பலனை நாங்கள் இன்றைக்கு அனுபவித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை எடுத்துக்காட்ட, “பிதாக்கள் திரட்சக் காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின” என்று அந்தக் காலத்தில் ஒரு பழமொழி இருந்தது. இந்த பழமொழி ஒருநாள் இல்லாமல் போகும் என்று பழைய ஏற்பாட்டுக் காலத்திலேயே கடவுள் சொல்லியிருந்தார்.
